கேரளாவில் 10 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்- மாநிலம் முழுவதும் 95 நிவாரண முகாம்கள் திறப்பு

இந்தியா முக்கிய செய்திகள்

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. அங்கு பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. மேலும் காட்டாறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. தாழ்வான பகுதிகளிலும் வெள்ளம் தேங்கியதால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.

ஆலுவாவில் உள்ள கோவிலை சுற்றி மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் பக்தர்கள் கோவிலுக்கு செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி கேரளாவில் கடந்த 3 நாட்களில் மட்டும் 12 பேர் பலியாகி உள்ளனர். இதற்கிடையே கேரளாவில் அடுத்த 72 மணி நேரத்துக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.

இந்த பகுதிகளில் சுமார் 20 செ.மீ. அளவுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை மையம் கூறியுள்ளது. இதையடுத்து மாநிலம் முழுவதும் உஷார் நிலை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. தேசிய பேரிடர் மீட்பு படையினரும் தயார் நிலையில் உள்ளனர். கனமழை எச்சரிக்கை விடப்பட்டு உள்ளதால் கேரளாவில் மொத்தம் உள்ள 14 மாவட்டங்களில் 10 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டு உள்ளது.

மீதமுள்ள 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு உள்ளனர். இதுபோல தாழ்வான பகுதிகளில் வசிப்போர் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு வருகிறார்கள். இவர்கள் தங்குவதற்காக 95 நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டு உள்ளன.

இதுவரை இந்த முகாம்களில் சுமார் 2219 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க முதல் மந்திரி பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார். கேரளாவில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பெரும்பாலான சாலைகள் சேதம் அடைந்துள்ளது. மேலும் பல சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

எனவே மழை நேரத்தில் இரவு நேர பயணத்தை தவிர்க்க வேண்டும் என மாநில அரசு அறிவுறுத்தி உள்ளது. இதற்கிடையே நடுக்காணி-நிலம்பூர் சாலையில் இரவு 9 மணி முதல் காலை 9 மணி வரை போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.