வீட்டை எரித்துவிட்டீர்கள்.. செல்வதற்கு வீடு இல்லை.. போராட்டக்காரர்களுக்கு இலங்கை அதிபர் ரணில் பதில்!

உலகம் முக்கிய செய்திகள்

இலங்கையில் நிலவும் பொருளாதார அசாதாரண நிலையால், பொதுமக்கள் அன்றாட தேவைக்கான பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

அத்துடன் இறக்குமதி செய்யப்படுகின்ற பொருட்களை கூட நீண்ட வரிசையில் நாள்கணக்கில் நின்று வாங்கும் நிலை இருக்கிறது. இந்த பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் உதவி செய்து வருகின்றன.

முன்னதாக இலங்கையின் அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே பதவியிலிருந்து விலகிய நிலையில் அடுத்ததாக ரனில் விக்ரமசிங்கே அதிபராக பொறுப்பேற்றுள்ளார். ஆனாலும், இலங்கையின் அசாதாரண சூழலில் எந்தவிதமான மாற்றமும் ஏற்படவில்லை.

இதனால் பொதுமக்கள் தங்களது போராட்டத்தை நிறுத்தவில்லை. தொடர்ந்து, ரணில் விக்ரமசிங்கேவையும் பதவி விலகக் கோரி போராட்டம் தொடர்கிறது. அத்துடன் போராட்டக்காரர்கள் பதவியில் இருந்து விலகி “வீட்டுக்கு போ” என்று போராட்டம் நடத்துகின்றனர்.

இதை குறிப்பிட்டு பேசிய இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, ” என்னை வீட்டுக்கு போ என்று கூறி போராட்டம் நடத்தாதீர்கள். ஏனென்றால், எனக்கு செல்வதற்கு வீடுகள் இல்லை. எனது வீடு தீக்கிரையாகிவிட்டது. எனவே எனக்கு வீடு கட்டித்தரும் ஏற்பாட்டை நீங்கள் துவங்குங்கள். பிறகு என்னை வீட்டிற்கு போ என்று போராட்டம் செய்யுங்கள். வீடு இல்லாத என்னை வீட்டுக்கு போக எப்படி வலியுறுத்தலாம்?

இந்த அசாதாரண நிலையை சரி செய்ய சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பணம் பெறும் முயற்சி தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது. பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து பணியாற்றி தீர்வுகளை காண வேண்டும். அதற்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.