கரூர் மாவட்டத்தில் ரூ.28.60 கோடி செலவில் முடிவுற்ற 95 திட்டப் பணிகளை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

தமிழ்நாடு முக்கிய செய்திகள்

கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ.28.60 கோடி செலவில் முடிவுற்ற 95 திட்டப் பணிகளை திறந்து வைத்து, ரூ.581.44 கோடி மதிப்பீட்டிலான 99 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 80,750 பயனாளிகளுக்கு ரூ.500.83 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (2.7.2022) கரூரில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ. 28.60 கோடி செலவில் முடிவுற்ற 95 திட்டப் பணிகளை திறந்து வைத்து, ரூ.581.44 கோடி மதிப்பீட்டிலான 99 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 80,750 பயனாளிகளுக்கு ரூ.500.83 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். திறந்து வைக்கப்பட்ட முடிவுற்ற திட்டப் பணிகளின் விவரங்கள்

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் தாளியாம்பட்டி, நந்தனூர், பண்ணப்பட்டி, கோட்டப்பட்டி, மண்மாரி ஆகிய இடங்களில் 1 கோடியே 25 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள துணை சுகாதார நிலையக் கட்டடங்கள்;

வேளாண்மை பொறியியல் துறை

வேளாண்மை பொறியியல் துறை சார்பில் தாந்தோணி ஊராட்சி ஒன்றியம், கரூர், ஏமூரில் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 75 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மண் பரிசோதனை நிலையம்;

நில அளவை பதிவேடுகள் துறை

நில அளவை பதிவேடுகள் துறை சார்பில் அரவக்குறிச்சி வட்டத்திற்குட்பட்ட தென்னிலை, க.பரமத்தி, சின்னதாராபுரம் ஆகிய இடங்களில் 51 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள குறுவட்ட அளவருக்கான குடியிருப்புடன் கூடிய அலுவலகக் கட்டடங்கள்;

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறையின் சார்பில், ஓலப்பாளையம், அழகாபுரி, மேலக்கம்பேஸ்வரம், மேலப்புதுப்பட்டி ஆகிய இடங்களில் அங்கன்வாடி மையங்கள், வாங்கல் குப்புச்சிபாளையம், பாளையூர், பெரியகாளிபாளையம், மகிழ்பட்டி, நெரூர், வெள்ளியணை ஆகிய இடங்களில் பள்ளி வகுப்பறைக் கட்டடங்கள், கரூர் அரசு கலைக்கல்லூரி வகுப்பறைக் கட்டடங்கள், கேத்தம்பட்டி, குப்பமேட்டுப்பட்டி, முத்தக்காபட்டி ஆகிய இடங்களில் சமுதாயக்கூடங்கள், வயலூர், பாப்பாக்காபட்டி, பண்ணப்பட்டி, இனுங்கனூர் ஆகிய இடங்களில் ஊராட்சிமன்ற அலுவலகக் கட்டடங்கள் தென்னிலை, எலவனூர், வேங்கம்பட்டி, கோட்டை, மலைச்சியூர் ஆகிய இடங்களில் சமையற்கூட கட்டடங்கள் என 3 கோடியே 70 இலட்சம் ரூபாய் செலவில் முடிவுற்ற பணிகள்;

கூட்டுறவுத்துறை

கூட்டுறவுத் துறையின் சார்பில், கரூர் மற்றும் அரவக்குறிச்சியில் தானியங்கி பணப்பட்டுவாடா இயந்திரங்கள் நிறுவுதல், குளித்தலை, உப்பிடமங்கலம், அரவக்குறிச்சி, தோகைமலை, கடவூர் ஆகிய இடங்களில் வேளாண் இயந்திரங்களை பயன்பாட்டிற்கு கொண்டுவருதல் என 2 கோடியே 75 இலட்சம் ரூபாய் செலவில் முடிவுற்ற பணிகள்;

பொதுப்பணித்துறை (கட்டடம்)

பொதுப்பணித்துறை சார்பில் புகளூர் வட்டத்திற்கு வட்டாட்சியர் குடியிருப்புடன் கூடிய அலுவலகக் கட்டடம், பரமத்தி, சின்னதாராபுரம், தென்னிலை ஆகிய இடங்களில் குறுவட்ட அளவர் குடியிருப்பு மற்றும் அலுவலகக் கட்டடம், கே. பரமத்தி அரசு உயர்நிலைப் பள்ளியில் சி.எஸ்.ஆர். திட்டத்தின் மூலம் நான்கு வகுப்பறைகள் மற்றும் கலையரங்கம், ஜெகதாபி அரசு மேல்நிலைப் பள்ளியில் நான்கு வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகம், கழிவறைகள் மற்றும் குடிநீர் வசதி, செங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைக் கட்டடம், கலை மற்றும் ஓவிய அறை, நூலக அறை, கழிவறைகள் மற்றும் குடிநீர் வசதி, பொம்மநாயக்கன்பட்டி மற்றும் இராச்சாண்டார் திருமலை அரசு உயர்நிலைப் பள்ளிகளில் அறிவியல் ஆய்வகம், கலை மற்றும் ஓவிய அறை, நூலக அறை, கணினி அறை மற்றும் குடிநீர் வசதிகள் என 7 கோடியே 97 இலட்சம் ரூபாய் செலவிலான முடிவுற்ற பணிகள்;

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், வாங்கல் குப்புச்சிபாளையம் மற்றும் சணப்பிரட்டி ஆகிய இடங்களில் 1 கோடியே 49 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள சமுதாயக்கூடங்கள்;

சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் (சத்துணவு) சார்பில், மலைச்சியூர், தென்னிலை, எலவனூர், வேலங்காட்டுப்பட்டி, வேங்காம்பட்டி, பெரிய குளத்துப்பாளையம் ஆகிய இடங்களில் 29 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வைப்பறையுடன் கூடிய சமையலறை கூடங்கள்;

பொதுப்பணித் துறையின் நபார்டு மற்றும் கிராம சாலைகள் திட்டம்

பொதுப்பணித்துறையின் நபார்டு மற்றும் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ், பெட்டவாய்த்தலை, நங்கவரம் சாலை வளையபட்டியில் 2 பாலங்கள் அய்யர்மலை, குமாரமங்கலம் சாலை வளையபட்டியில் கட்டப்பட்டுள்ள பாலம் என 7 கோடியே 4 இலட்சம் ரூபாய் செலவில் முடிவுற்ற பணிகள் ;

நீர்வளத் துறை

நீர்வளத்துறையின் சார்பில், கடவூர் வட்டம், கொசூர் அய்யன்குளம், கரூர் வட்டம், வெள்ளியணை குளம், குளித்தலை வட்டம், கூடலூர் ஏரி, வடசேரி ஏரி, புத்தூர் ஏரி, நெய்தலூர், பனையூர், நங்கம்காட்டு வாய்க்கால், பள்ளவாய்க்கால், குளத்துவாய்க்கால், கிருஷ்ணராயபுரம் வட்டம், கிருஷ்ணராயபுரம் வாய்க்கால், காட்டுவாய்க்கால், பள்ளவாய்க்கால், பகுடிவாய்க்கால், மகாதானபுரம், சிந்தலவாடி, பிள்ளபாளையம், மருதண்டன், பேட்டை, வதியம், மாவடி, கும்பக்குழி, கட்டளைமேடு, வல்லம், நாதன்கோட்டை, பிச்சம்பட்டி, மேலக்குட்டப்பட்டி ஆகிய 19 வரத்து வாய்க்கால்களில் 2 கோடியே 85 இலட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ள தூர்வாரும் பணிகள்; என மொத்தம் 28 கோடியே 60 இலட்சம் ரூபாய் செலவில் முடிவுற்ற 95 பணிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று திறந்து வைத்தார்.

அடிக்கல் நாட்டப்பட்ட திட்டப் பணிகளின் விவரங்கள்

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் முகாம்வாழ் இலங்கை தமிழர்களுக்கு 225 தொகுப்பு வீடுகள், 4 உணவு தானியக்கிடங்குகள், 7 ஊராட்சிமன்ற அலுவலகங்கள், 19 அங்கன்வாடி மையங்கள், என 26 கோடியே 39 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான பணிகள்; மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் இரும்புதிப்பட்டி, தாந்தோணிமலையில் சுகாதார நிலையம், கரூர், இனாம் கரூர் , தாந்தோணிமலை மற்றும் பசுபதிபாளையம் ஆகிய இடங்களில் நலவாழ்வு மையங்கள், என
2 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பணிகள்;

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில், இனாம் கரூர், பசுபதிபாளையம், காமராஜர் தெரு, தாந்தோணி ஆகிய இடங்களில் நகர்ப்புற சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய மையங்கள், தோரணக்கல்பட்டி, கரூர் மாநகரம், இனாம் கரூர் ஆகிய இடங்களில் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் நலவாழ்வு மையங்கள், என 51 கோடியே 20 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான பணிகள்;

கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் 1 கோடியே 51 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கரூர் அரசு இசைப்பள்ளி கட்டடம் கட்டும் பணி; பேரூராட்சித் துறையின் சார்பில், கிருஷ்ணராயபுரம், மருதூர், நங்கவரம், பி.ஜே.சோழபுரம், புலியூர், உப்பிடமங்கலம் ஆகிய இடங்களில் சாலை பலப்படுத்தும் பணிகள், பி.ஜே.சோழபுரம், புலியூர், புஞ்சைத்தோட்டக்குறிச்சி ஆகிய இடங்களில் சாலை அமைக்கும் பணிகள், என 9 கோடியே 30 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான பணிகள்;

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தைச் சார்ந்த பள்ளபட்டி, பழைய ஜெயங்கொண்டம், சின்ன பனையூர், க.பரமத்தி, கடவூர் ஆகிய 5 இடங்களில் புதிய துணை மின் நிலையங்கள், பள்ளபட்டி, கரூர் ஆகிய இடங்களில் மின்மாற்றித் திறன் உயர்த்தும் பணிகள், குளித்தலை வட்டத்தில் 12 கிலோ வாட் மின்பாதை மேம்படுத்தும் பணி, அரவக்குறிச்சி மற்றும் கிருஷ்ணராயபுரம் வட்டத்தில் இரட்டை மின்மாற்றிகளைப் பிரிக்கும் பணி, உயர் மின்னழுத்த விநியோக அமைப்பினை நிறுவும் பணி, 15 மின்பாதைகள் பிரிக்கும் பணிகள், 237 கி.மீ. தொலைவிற்கு புதிய உயர்மின்னழுத்த பாதைகள் அமைக்கும் பணிகள், 597.6 கி.மீ. தொலைவிற்கு புதிய மின்கடத்தி அமைக்கும் பணிகள், என 387 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பணிகள்;

உயர்கல்வித் துறையின் சார்பில் 12 கோடியே 46 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டும் பணி; நீர்வளத்துறையின் சார்பில், அரவக்குறிச்சியில் 2 தடுப்பணைகள், புகளூர், கரூர், மருதூர் ஆகிய இடங்களில் வாய்க்கால் புனரமைக்கும் பணிகள், அரவக்குறிச்சியில் கால்வாய் கரை உயர்த்தும் பணி, என 91 கோடியே 58 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான பணிகள்; என மொத்தம் 581 கோடியே 44 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 99 புதிய திட்டப் பணிகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று அடிக்கல் நாட்டினார்.

பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கிய விவரங்கள்

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில், 14 ஆயிரத்து 811 பயனாளிகளுக்கு உதவிகள், மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் 5181 பயனாளிகளுக்கு வங்கிக் கடனுதவிகள், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், நுண்ணுயிர் பாசனத்திட்டம், ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டம், முதலமைச்சரின் சூரியசக்தி பம்புசெட்டுகள் அமைத்தல், பண்ணைக்குட்டை அமைத்தல் போன்ற திட்டங்களின் கீழ் 2486 பயனாளிகளுக்கு உதவிகள், சமூக நலன் மற்றும் மகளிர் நலத்துறை சார்பில் இலவச தையல் இயந்திரங்கள், திருநங்கைகளுக்கு அடையாள அட்டைகள் என 79 பயனாளிகளுக்கு உதவிகள், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 3000 பயனாளிகளுக்கு உதவிகள், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின்கீழ், தொழில் குழு மற்றும் உற்பத்தியாளர்குழு துவக்க 166 பயனாளிகளுக்கு உதவிகள்;

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் விடியல் வீடு, பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனாத் திட்டம், தூய்மை பாரத இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டம் ஆகியவற்றின் கீழ் 10518 பயனாளிகளுக்கு உதவிகள், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில், அனைவருக்கும் வீடு திட்டம், பயனாளிகள் தாமாக வீடு கட்ட பணி ஆணை மற்றும் அடுக்குமாடி குடியிருப்புக்கான ஒதுக்கீடு ஆணை, என 260 பயனாளிகளுக்கு உதவிகள், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில், 3230 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்குதல் மற்றும் குடும்ப அட்டைகளை வகைமாற்றம் செய்தல்;

கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில், ஏழ்மை நிலையிலுள்ள விதவைகள் / கணவனால் கைவிடப்பட்ட / ஆதரவற்ற பெண் பயனாளிகளுக்கு 100 சதவீதம் மானியத்தில் வெள்ளாடுகள் / செம்மறியாடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 800 பயனாளிகளுக்கு உதவிகள்; சமூக பாதுகாப்புத்துறையின் கீழ் செயல்படும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு சார்பில், கொரோனா நோய்த்தொற்றால் பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கான நிவாரண உதவித்தொகை, கொரோனா நோய்த்தொற்றால் தாய் மற்றும் தந்தை ஆகிய இருவரையும் இழந்த குழந்தைகளுக்கான மாதாந்திர பராமரிப்பு நிவாரண உதவித்தொகை மற்றும் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இழப்பீட்டு நிவாரண தொகை, என 123 பயனாளிகளுக்கு உதவிகள்;

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், இணைப்புச்சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரத்தியோகமாக இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், வங்கிக்கடன் மானியம், பிரெய்லீ கைக்கடிகாரங்கள், முதலமைச்சரின் விரிவான மருத்துவத்திட்டத்தின் கீழ் செயற்கைக்கால் வழங்கும் திட்டம், காதொலிக்கருவி வழங்கும் திட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கு திறன்பேசி, பேருந்து பயணச்சலுகை, ஒளிரும் ஊன்றுகோல், தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டைகள், மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை, மாற்றுத்திறனாளி அடையாள அட்டைகள், என 1662 பயனாளிகளுக்கு உதவிகள்;

என பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 80,750 பயனாளிகளுக்கு 500 கோடியே 83 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் திரு.கே.என். நேரு, மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு.வி.செந்தில்பாலாஜி, மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.எஸ்.எஸ். சிவசங்கர், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வி செ.ஜோதிமணி, சட்டமன்ற உறுப்பினர்கள் திருமதி கே. சிவகாமசுந்தரி, திரு. ஆர். மாணிக்கம், கரூர் மாநகராட்சி மேயர் திருமதி வெ.கவிதா, துணை மேயர் திரு. பா. சரவணன், கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மரு. த. பிரபுசங்கர், இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.