அங்கன்வாடி மையங்களில் LKG,UKG சேர்க்கைக்கு ஆணை – தமிழக அரசு உத்தரவு!!

தமிழ்நாடு முக்கிய செய்திகள்

தமிழகத்தில் எல்.கே.ஜி, யு.கே.ஜி மாணவர் சேர்க்கை நடத்த தொடக்கக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் 2381 அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கேஜி ஆகிய மழலையர் வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்படும் என்று அரசு அறிவித்தது. ஆனால் அதற்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்படாமலேயே இருந்தது. இதனால் பெற்றோர்கள் மத்தியில் கவலை ஏற்பட்டது. தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 2019-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட எல்.கே.ஜி, யு.கேஜி ஆகிய மழலையர் வகுப்புகள் மூடப்படுவதாக ஜூன் மாதத் தொடக்கத்தில் தமிழக அரசின் தொடக்கக்கல்வித் துறை அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் மழலையர் வகுப்புகள் அரசு பள்ளிகளுக்கு மாற்றாக அங்கன்வாடிகளில் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்தது. இருப்பினும் 2381 அரசு பள்ளிகளில் ஒன்றில் கூட எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை தொடங்கப்படாதது பேசும்பொருளானது.

இந்நிலையில் தமிழகத்தில் எல்.கே.ஜி, யு.கே.ஜி மாணவர் சேர்க்கை நடத்த தொடக்கக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது . 2,381 மையங்களில் மாணவர்களை சேர்க்கலாம் என அறிவித்துள்ள நிலையில், சிறப்பு ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படும் வரை, அங்கன்வாடி பணியாளர்களை கொண்டு தலைமை ஆசிரியர்கள் வகுப்புகளை எடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தியுள்ளது. அத்துடன் கூடுதல் வகுப்பறைகள் இல்லாத அரசுப் பள்ளிகளில், அங்கன்வாடி வகுப்பறைகளை பயன்படுத்தலாம் என்றும் தெரிவித்துள்ளது. எல்.கே.ஜி, யு.கே.ஜி மாணவர் சேர்க்கை நடைபெறாதது தொடர்பாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், தொடக்கக்கல்வி இயக்குனர் இவ்வாறு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.