“துரோகியே வெளியே போ” – OPS-க்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக தொண்டர்கள்

தமிழ்நாடு முக்கிய செய்திகள்

அதிமுக-வின் உட்கட்சி பூசல் அதிகரித்திருக்கும் நிலையில் கட்சியின் பொதுக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பன்னீர்செல்வம் இடையேயான மோதல் அதிகரித்திருக்கக் கூடிய சூழலில் இந்த பொதுக்குழு கூட்டம் நடைபெறுவதால் இது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

அதிமுக-வின் முன்னாள் பொது செயலாளர் ஜெயலலிதா மறைவுக்கு பின் ஏற்பட்ட மோதல் காரணமாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டு முறையே ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் பொறுப்பேற்றுக் கொண்டனர். இந்த நிலையில் எடப்பாடி தரப்பு கட்சியில் வலுப்பெற்றுள்ளதால் ஓ.பன்னீர்செல்வத்தை கழற்றிவிட்டுவிட்டு ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிசாமியை மாற்ற திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

இதனை அறிந்து கொண்ட ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் இரட்டைத் தலைமை முறையே தொடர வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த பொதுக்குழு கூட்டம் கூடினால் ஒற்றைத் தலைமை தீர்மானம் நிறைவேற்றப் படலாம் என்பதால் ஓ.பன்னீர்செல்வம் பொதுக்குழு கூட்டத்திற்கு தடை கேட்டு நீதிமன்றம் சென்றார். நீதிமன்றமோ பொதுக்குழுவுக்கு தடை விதிக்க முடியாது என்று தீர்ப்பளித்துவிட்டது. ஆனால் ஒற்றைத் தலைமை பற்றி இந்த கூட்டத்தில் பேசக் கூடாது என்றும் கூறியிருக்கிறது.

இந்நிலையில் இன்று காலை வானகரத்தில் நடைபெறும் பொதுக்குழு கூட்டத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் வந்தபோது தொண்டர்கள் “துரோகியே வெளியே போ” என்று கோஷங்கள் எழுப்பினர். மறுபுறம் எடப்பாடி பழனிசாமிக்கு பலத்த ஆதரவு நிலைப்பாடு காணப்படுகிறது. அதேநேரம் அதிமுக-வை சாராத பலர் கூட்ட அரங்கிற்குள் நுழைந்து உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இன்றைய பொதுக்குழு கூட்டத்தில் என்ன நடக்கப் போகிறது என்ற ஆவலில் தொண்டர்கள் உள்ளனர்.