தயாரான அரங்கம்; ‘வரலாற்று சிறப்புமிக்க அதிமுக பொதுக்குழு’ – கடும் போலீஸ் பாதுகாப்பு..!!!

தமிழ்நாடு முக்கிய செய்திகள்

அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்திற்கான விழா மேடை மற்றும் மண்டபம் தயாரானது.

இன்று காலை 10 மணியளவில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கான பிரமாண்ட ஏற்பாடுகள் கடந்த 4 நாட்களாக நடைபெற்று வந்த நிலையில், அனைத்து பணிகளும் தற்போது முடிவுற்று விழாவிற்கு தயாரானது மண்டபம்.

குறிப்பாக ஜெயலலிதா படத்துடன் கூடிய பாராளுமன்றம் போன்று முகப்பு அலங்காரம் அமைக்கப்பட்டு அதில் வரலாற்று சிறப்புமிக்க அஇஅதிமுக பொதுக்குழு செயற்குழு கூட்டம் என்ற தலைப்பும் உள்ளது. அதேபோல் விழா மேடை அலங்காரமும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. வரவேற்பு பதாகைகள் என அனைத்தும் தயாராகிவிட்டது.

சுமார் 2750 பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்ளவிருக்கும் நிலையில், மண்டபத்தில் மூன்று அரங்குகள் அமைக்கப்பட்டு, பொதுக்குழு உறுப்பினர்களை அமர வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொதுக்குழுவிற்கு வரும் நிர்வாகிகள் தீவிர சோதனைக்கு பின்பே மண்டபத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். அடையாள அட்டை இல்லாத எவரும் உள்ளே அனுமதிக்க படமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொதுக்குழு செயற்குழு கூட்டத்திற்கு இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.