ஆப்கானிஸ்தான் தலைநகர் குருத்வாரா அருகே அடுத்தடுத்து குண்டுவெடிப்பு..!!!

உலகம் முக்கிய செய்திகள்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சீக்கிய குருத்வாரா அருகேவுள்ள சாலையில் அடுத்தடுத்து இரண்டு குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

இதில் உயிரிழந்தவர்கள் குறித்த தகவல்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை. இந்த சம்பவம் கவலையளிப்பதாக ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், நிலைமையை கவனித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.

உள்ளூர் நேரப்படி காலை 6 மணிக்கு முதல் வெடிச் சத்தம் கேட்டுள்ளது. இதற்கு அரைமணி நேரத்திற்குப் பிறகு இரண்டாவது வெடிச் சத்தம் எழுந்துள்ளது.

இதைத் தொடர்ந்து, அந்தப் பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டுள்ளதாக சீன அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சம்பவத்தை நேரில் பார்த்தவர் கூறுகையில், “முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்புப் படையினர் அந்தப் பகுதியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். வெடிச் சத்தம் பெரிதளவிலான புகை மூட்டத்தை எழுப்பி, அச்ச உணர்வை உண்டாக்கியது. உயிரிழப்புகள் நேரிட்டிருக்கும் அச்சம் உள்ளது. பாதுகாப்புப் படையினரும் எச்சரிக்கைக்காக துப்பாக்கியால் சுட்டனர்” என்றார்.

இந்தச் சம்பவம் குறித்து அதிகாரபூர்வமாக எந்தவொரு அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை.