அச்சு தொழில் மீதான GST வரியை குறைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..!!

தமிழ்நாடு முக்கிய செய்திகள்

அச்சு தொழில் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அச்சு தொழில் சங்க நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை (மே 14) தி மெட்ராஜ் பிரிண்டர்ஸ் மற்றும் லித்தோ கிராஃபர்ஸ் அசோசியேஷன் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அசோசியேஷன் தலைவர் கே.ராஜேந்திரன், கௌரவ செயலாளர் ஜாலி பீட்டர் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான அச்சக தொழில் முனைவோர்கள், தொழிலாளர்கள் திரளாக கலந்துகொண்டு தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து முழக்கங்களை எழுப்பினர்.

காகித ஏற்றுமதியை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும், அச்சுத் தொழிலுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதமாக உயர்த்தியை மீண்டும் பழைய வரி அளவுக்கு குறைக்க வேண்டும்,

 

அச்சு உற்பத்திக்கு பயன்படும் மூலப்பொருட்கள் 200 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளதை கட்டுப்படுத்தி மீண்டும் பழைய விலைக்கே கொண்டு வர வேண்டும்.

அச்சு தொழிற்கூடங்களை உற்பத்தி பிரிவு ( Manufacturing Unit ) ஆக வகைப்படுத்தி பதிவு செய்ய வழிவகுக்க வேண்டும் என்பன கோரிக்கை வலியுறுத்தி சங்க நிர்வாகிகள் பேசினர்.

தி மெட்ராஜ் பிரிண்டர்ஸ் மற்றும் லித்தோ கிராஃபர்ஸ் அசோசியேஷனில் 2 ஆயிரத்து 500 உறுப்பினர்கள் உள்ளனர்.

பரம்பரை பரம்பரையாக அச்சு தொழிலில் ஈடுபட்டு வருபவர்களின் பொருளாதார நிலை, கொரோனா காலத்தில் படு வீழ்ச்சியை சந்தித்து, அச்சு தொழிலையே தொடர முடியாத நிலை உருவாகியுள்ள நிலையில்,

2021 ல் ஒரு மெட்ரிக் டன் காகிதம் 40 ஆயிரம் ரூபாய் என்றிருந்த நிலையில், இன்றைய தினம் இருமடங்கிற்கு மேலாக 95 ஆயிரம் ரூபாய் என்று வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து விட்டதால் பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சென்னையில் மட்டும் 60 ஆயிரம் அச்சு தொழிற்கூடங்கள் இயங்கி வரும் நிலையில், தொழில் முனைவோர் மற்றும் தொழிலாளர்களை உள்ளடக்கிய பல ஆயிரம் பேரின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் காகித ஏற்றுமதிக்கு தடை,

ஜிஎஸ்டி வரி குறைப்பு உள்ளிட்ட அச்சு தொழிலை பாதிக்கக் கூடிய அம்சங்களில் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அச்சு தொழில் சங்க நிர்வாகிகள் வேண்டுகோள் விடுத்தனர்.