ஓமந்தூரார் வளாகத்தில் கருணாநிதி சிலை 28ந்தேதி திறப்பு

தமிழ்நாடு முக்கிய செய்திகள்

ஜூன் 3ந்தேதி முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்த தினமாகும். அன்றைய தினம் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

இதையடுத்து கருணாநிதி பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடும் வகையில் கருணாநிதிக்கு ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் ரூ.1.56 கோடி செலவில் சிலை அமைக்கப்பட்டு வருகிறது.

கருணாநிதி சிலை திறப்பு விழா வருகிற 28ந்தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது. சிலையை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு திறந்து வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு அதிகாரிகள் தீவிரமாக செய்து வருகிறார்கள்.

அடுத்த வாரம் சிலையை நிறுவும் பணி நடைபெறுகிறது. விழா மேடை அமைக்கும் பணிகளும் தொடங்கப்பட உள்ளன.

இந்த விழாவில் பங்கேற்குமாறு அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் அழைக்கப்பட உள்ளனர். அவர்களுக்கு விரைவில் அழைப்பிதழ் அனுப்பப்பட உள்ளது.