அனைத்துப் பல்கலைக் கழக தேர்வுகள் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைப்பு: அமைச்சர் பொன்முடி

அனைத்து பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்படுவதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி: தமிழகத்தில் தற்போது ஓமைக்ரான் பரவல் அதிகரித்துள்ள நிலையில் முதலமைச்சர் ஆலோசனைப்படியே தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பருவத் தேர்வுகள் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்படுவதாக தெரிவித்தார். மேலும் தொற்று பரவல் எண்ணிக்கை குறைந்த பின்னர் தேர்வுகள் நடத்துவது தொடர்பாக மாணவர்களுக்கு போதிய கால அவகாசம் அளித்து அதன் பின்னரே பருவ தேர்வுகள் நடத்தப்படும் என தெரிவித்தார்

ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடத்தினால் சரிவர அமையாது எனவும் நேரடியாக தேர்வு நடத்த அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்,தற்போது செய்முறை தேர்வுகளை குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்கள் மட்டுமே பங்கேற்பதால் அந்த தேர்வுகள் நடைபெறுவதாகவும் தெரிவித்தார். அவர்களுக்கு தற்போது தேர்வு காலத்திற்கான விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதாகவும் எனவே மாணவர்கள் இந்த விடுமுறை காலத்தில் நடத்தி முடிக்கப்பட்ட பாடங்களை நன்கு படித்து பருவ தேர்வுகள் அறிவிக்கும்போது எழுத வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார்

இந்த முடிவு கல்வியின் தரம் மற்றும் மாணவர்களின் நலன் கருதி எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார் தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாகவும் ஏதேனும் கல்லூரிகள் இயங்குவதாக புகார் வந்தால் அது குறித்து துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.