இனி மாஸ்டர் கார்டு நிறுவன ஏடிஎம் கார்டுகளுக்கு தடை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

டெல்லி

மாஸ்டர் கார்டு நிறுவனத்தின் டெபிட், கிரெடிட் கார்டுகளை வழங்க இந்திய ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. இதன்மூலம் புதிய வாடிக்கையாளர்களுக்கு வங்கிகளால் மாஸ்டர் கார்டுகளை வழங்க முடியாது. ரிசர்வ் வங்கியின் இந்த முடிவு ஜூலை 22 முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. அதேசமயம், ஏற்கனவே மாஸ்டர் கார்டு பயன்படுத்துவோருக்கு புதிய தடையால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களின் தரவை சேமிப்பதில் ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை மீறியதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாஸ்டர் கார்டு நிறுவனத்திற்கு அதிகமான அவகாசம் மற்றும் போதுமான வாய்ப்புகள் வழங்கப்பட்டபோதிலும், பணம் செலுத்தும் முறை தொடர்பான தரவுகளை சேமிக்கும் சர்வரை இந்தியாவில் வைக்காததால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

முன்னதாக, இந்த ஆண்டின் தொடக்கத்தில், அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் மற்றும் டைனர்ஸ் கிளப்புக்கு எதிராக ரிசர்வ் வங்கி இதேபோன்ற நடவடிக்கையை எடுத்தது. மே 1ம் தேதி முதல் புதிய உள்நாட்டு கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களைச் சேர்ப்பதற்கு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.