கொரோனா பரவல் அதிகரிப்பு மராட்டிய மாநிலம் அமராவதியில் மீண்டும் ஊரடங்கு அமல்

மும்பை: மராட்டிய மாநிலத்தில் கொரோனா பரவல் நன்கு கட்டுப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக மீண்டும் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக அமராவதி மாவட்டத்தில் தினமும் சுமார் 1,000 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது. இதையடுத்து, அந்த மாவட்டத்தில் ஒரு வாரத்துக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த ஊரடங்கு நேற்று முதல் அமலுக்கு வந்தது. வரும் மார்ச் 1-ம் தேதி காலை 8 மணி வரை இது நடைமுறையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கின் போது அமராவது மாவட்டத்தில் அனைத்து கடைகள், அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள், திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள் மூடப்பட்டிருக்கும், அதேநேரம் காலை 9 மணி முதல் 5 மணி வரையில் அத்தியாவசிய பொருட்கள் கடைகள் மட்டும் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் மராட்டிய மாநிலத்தின் புனே மாவட்டத்தில் பள்ளிகள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவற்றை வரும் 28 ஆம் தேதி வரை மூடுவதற்கு அந்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.