தமிழ் பண்பாட்டு மேடை நடன கலைஞர்கள் முன்னேற்ற சங்கம் கோரிக்கை

சென்னை மாநகர காவல் ஆணையாளருக்கு தமிழ் பண்பாட்டு மேடை நடன கலைஞர்கள் முன்னேற்ற சங்கம் வைத்துள்ள கோரிக்கையில், கடந்த 3 வருடங்களாக ( ஆடல் – பாடல் ) நடன நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு காவல் துறையின் மூலம் நேரடி அனுமதி வழங்கக்கோரி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருக்கும் தருணத்தில் கடந்த (09.04.2019) ம் தேதியன்று மதுரை உயர்நீதி மன்ற நீதியரசர் பாரதிதாசன் ஐயா அவர்கள் மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கு உட்பட்ட 13 தென்பகுதி மாவட்டங்களின் காவல் கண்காணிப் பாளர்கள் அனைவருக்கும் நடன நிகழ்ச்சிகள் (ஆடல் – பாடல் ) நடத்துவதற்கு காவல்துறையினர் நேரடி அனுமதி வழங்கலாம் என்பதனை பரிந்துரைத்து சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்கள். இத்தகைய சூழலில் மதுரை உயர்நீதிமன்ற கிளையின் நீதியரசர் பாரதிதாசன் ஐயா வழங்கிய அதே தீர்ப்பினையும் பரிந்துரை செய்து அனுப்பிய சுற்றறிக்கையையும் சுட்டி காட்டி கடந்த 24.08.2019 ம் தேதியன்று சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர்கள் வினித் கோத்தாரி மற்றும் சி.வி.கார்த்திகேயன் அவர்களும் தமிழக காவல்துறைக்கு நடன நிகழ்ச்சிகள் (ஆடல் – பாடல்) நடத்துவதற்கு 2 வாரங்களுக்கு முன்பாக நிகழ்ச்சிக்கு விண்ணப்பிக்கும் பொருட்டு, நடன நிகழ்ச்சிக்கு ( நீதிமன்ற ஆணையில்லாமல்) நேரடி அனுமதி வழங்கலாம் என்றும், மேலும் அத்தகைய தீர்ப்பின் நகலை தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பி வைக்கும்படியும் ஐயா அவர்களுக்கும் பரிந்துரை செய்துள்ளார்கள். எனவே மதிப்பிற்குரிய ஐயா அவர்கள், தமிழக நடன கலைஞர்களின் வாழ்வாதாரம் காத்திடும் வகையில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் நகலை சுற்றறிக்கையாக தமிழகத்தின் அனைத்து காவல் நிலையத்திற்கும் கனிவு கூர்ந்து அனுப்பி வைத்து உதவிடும்படி பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மேடை நடன கலைஞர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றிட மனது வைத்து நல்வழி காட்டிய உயர்நீதிமன்றத்தின் நீதியரசர்களுக்கும் காவல்துறை சார்ந்த காவல்துறை அதிகாரிகளுக்கும் எங்களது சங்கத்தின் சார்பில் மனமார்ந்த நன்றிகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.