கேல் ரத்னா விருது கிடைக்காமல் போனதற்கு ஹர்பஜன் சிங் வேதனை

மத்திய அரசு வழங்கும் உயரிய விருதாக ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது உள்ளது. இதற்கு பஞ்சாப் அரசு சார்பில் ஹர்பஜன் சிங்கின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது. இந்த பரிந்துரைக்கான ஹர்பஜன் சிங்கின் ஆவணங்கள் தாமதமாக வந்தடைந்ததாக கூறி மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சகம் அதனை நிராகரித்தது. இதையடுத்து ஹர்பஜன் சிங் மிகுந்த வருத்தமடைந்தார். இது குறித்து ஹர்பஜன் சிங் பஞ்சாப் மந்திரிக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்து உருக்கமான வீடியோ ஒன்றை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் ஹர்பஜன் சிங் கூறியதாவது:

கேல் ரத்னா விருது பரிந்துரைக்கான ஆவணங்களை பஞ்சாப் அரசு தாமதமாக அனுப்பியதால், மத்திய அரசு அதனை நிராகரித்துவிட்டதாக செய்தி மூலம் அறிந்தேன். இதனால், இந்த வருடம் விருதுக்கான பரிந்துரையில் என் பெயர் இடம் பெறவில்லை.

கடந்த மார்ச் 20 அன்றே, உங்கள் அலுவலகத்திற்கு ஆவணங்களை நான் சமர்பித்து விட்டேன். அந்த ஆவணங்கள் 10,15 நாட்களில் டெல்லிக்கு சென்றிருக்க வேண்டும். உரிய நேரத்தில் சென்றடையவில்லை. அப்படி சென்றிருந்தால், எனக்கு விருது கிடைத்திருக்கும். மற்ற வீரர்களுக்கும் இது ஊக்கமாக இருக்கும். இதுபோன்று தாமதமானால் வீரர்களுக்கு சிக்கல் ஏற்படும். அப்படிதான் எனக்கு தற்போது ஆகிவிட்டது. எனவே, அடுத்த வருடம் என் பெயரை பரிந்துரைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.