சென்னையில் தேசிய அளவிலான பெண்களுக்கான சதுரங்க போட்டி

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் சர்வதேச சதுரங்க சங்கத்தின் துணை தலைவர் சுந்தர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தமிழ்நாடு சதுரங்க சங்கம் சார்பாக செட்டிநாடு பப்ளிக் பள்ளி நடத்தும் 46வது தேசிய அளவிலான பெண்களுக்கான சதுரங்க போட்டி வருகின்ற 19.07.2019 அன்று காரைக்குடியில் துவங்க உள்ளது. ஒன்பது நாட்கள் நடைபெறும் இந்த போட்டிகள் 11 சுற்றுகளாக நடைபெற்று 27.07.2019 அன்று முடிவடைகிறது.

இதில் 20 மாநிலத்தில் இருந்து 2 சர்வதேச சதுரங்க மாஸ்டர்ஸ், 7 பெண் கிராண்ட் மாஸ்டர்ஸ், 13 சர்வதேச பெண் கிராண்ட் மாஸ்டர்ஸ் உட்பட மொத்தம் 106 வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாட உள்ளனர்.

இதில் முதல் இடம் பிடிக்கும் வீரங்கனைக்கு 4 லட்சம் முதல் பரிசும், இரண்டாம் இடம் பிடிக்கும் வீரங்கனைக்கு 3 லட்சம் பரிசும், மூன்றாம் இடம் பிடிக்கும் வீரங்கனைக்கு 2 லட்சம் பரிசும் வழங்கப்பட உள்ளன என்று கூறினார். இந்த செய்தியாளர் சந்திப்பின் போது தமிழ்நாடு சதுரங்க சங்க செயலாளர் ஸ்ரீபன், செஸ் மாஸ்டர் விஜயலட்சுமி உடன் இருந்தனர்.