தேமுதிகவின் நேர்காணல் தேதி விஜயகாந்த் அறிவிப்பு

தமிழ்நாடு முக்கிய செய்திகள்

மக்களவை பொதுத் தேர்தல் ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. இதன்படி, தமிழகம், புதுச்சேரியில் ஏப்ரல் 18-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை மே 23-ம் தேதி நடைபெறுகிறது.

இந்நிலையில் தேமுதிக சார்பில் விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல் வரும் 13-ம் தேதி நடைபெறும் என்று அக்கட்சியின் தலைவரும், பொதுச் செயலாளருமான விஜயகாந்த் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்காக தங்கள் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல் 13.03.2019 காலை 10 மணியளவில் எனது முன்னிலையில் ஒரே நாளில் நடைபெற இருக்கின்றது. எனவே, விருப்ப மனு கொடுத்துள்ளவர்கள் மேலே குறிப்பிட்டுள்ள தேதியில் நேரில் வரவேண்டும். வரும்பொழுது, தேமுதிக உறுப்பினர் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, கல்விச் சான்றிதழ், தனித் தொகுதிக்கு சாதிச் சான்றிதழ் ஆகியவற்றின் நகல் கண்டிப்பாக கொண்டு வர வேண்டும். என்று தெரிவித்துள்ளார்.