சிசிடிவி கேமராக்கள் பொருத்த தனது சேமிப்பிலிருந்து பணம் கொடுத்த சிறுமிக்கு ஏ.கே.விஸ்வநாதன் பாராட்டு

மருத்துவம் முக்கிய செய்திகள்

சென்னை, காட்டுபாக்கத்தில் வசித்து வரும் ஶ்ரீஹிதா,(9), 3ம் வகுப்பு படித்து வருகிறார். ஶ்ரீஹிதா சில வாரங்களுக்கு முன்னர் ராயப்பேட்டையிலுள்ள தனது தந்தை சத்யநாராயணாவின் அலுவலகத்திற்கு சென்றிருந்தபோது, அங்கு காவல்துறையினர் சிசிடிவி கேமரா பொருத்துவது குறித்து கலந்தாய்வு மேற்கொண்டிருந்தனர்.

அப்போது இதனைக் கண்ட சிறுமி ஶ்ரீஹிதா தனது சேமிப்பிலிருந்து சிசிடிவி கேமரா பொருத்த பணம் தருவதாக கூறினார். இந்நிகழ்வை கண்ட காவல் அதிகாரிகள் சிறுமியை பாராட்டிவிட்டு சென்றனர் ஆனால், சில நாட்களில் மேற்படி சிறுமி ஶ்ரீஹிதா தனது தந்தையுடன் காவல் அதிகாரிகளை சந்தித்து, தனது சேமிப்பு பணத்திலிருந்து ரூ.1,50,000/- பணத்தை கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

சிறுமியிடம் விசாரித்தபோது, சிசிடிவி கேமராவால் காவல்துறையில் பல குற்றவாளிகள் கைது செய்யப்பட்டிருப்பதாக தனது தந்தை கூறியதாகவும், ஆகவே, காவல்துறைக்கு தன்னால் முடிந்த தனது சேமிப்பிலிருந்த ரூ.1.5 லட்சம் பணத்தை கொடுத்ததாக தெரிவித்தார். மேற்படி சிறுமியின் செயலை கேள்விப்பட்ட சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அ.கா.விசுவநாதன், சிறுமி ஶ்ரீஹிதாவை நேரில் அழைத்து வெகுவாகப் பாராட்டினார். உடன் சிறுமியின் தந்தை சத்யநாராயணா மற்றும் சகோதரன் யதின் ஆகியோர் இருந்தனர்.