பெண்ணின் வயிற்றுக்குள் இருந்த 22 கிலோ கர்ப்பப்பை கட்டி அகற்றம் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை

மருத்துவம் முக்கிய செய்திகள்

சேலத்தைச் சேர்ந்தவர் அக்‌ஷயா ஜெனிபர் (41). கடந்த 5 ஆண்டுகளாக வயிற்று வலி, மூச்சுத் திணறல் மற்றும் வயிறு வீக்கத்தால் அவதிப்பட்டு வந்துள்ளார். அவருக்கு சிகிச்சை மேற்கொண்ட போது, வயிற்றுக்குள் கர்ப்பப்பையுடன் சேர்ந்து மிகப்பெரிய அளவிலான கட்டி இருப்பது தெரியவந்துள்ளது.

அப்போது ஸ்டான்லி மருத்துவமனையின் டீன் எஸ்.பொன்னம்பல நமச்சிவாயம் ஆலோசனையின்படி பொது அறுவை சிகிச்சைத் துறைத் தலைவர் பாலமுருகன், டாக்டர்கள் காயத்ரி முத்துகுமரன், சிவக்குமார், நஹித் ஆகியோர் கொண்ட குழுவினர் சுமார் 5 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து 22 கிலோ எடை கொண்ட கட்டியை வெற்றிகரமாக அகற்றினர். பின்னர், 2 நாட்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் கண்காணிக்கப்பட்ட அவர், அடுத்த 10 நாட்களில் பூரணமாக குணமடைந்தார்.

இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், கர்ப்பப்பையில் வரக்கூடிய சாதாரண கட்டி இது என்றும், கட்டி முழுவதுமாக அகற்றப்பட்டு விட்டதால், மீண்டும் கட்டி வராது. தமிழகத்தில் முதல் முறையாக 22 கிலோ கட்டி அகற்றப்பட்டுள்ளது. முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இலவசமாக செய்யப்பட்ட இந்த அறுவை சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் செய்ய ரூ.2 லட்சம் வரை செலவாகும் என்று தெரிவித்தார்கள்.