வாழ்வை வளமாக்கும் சேமிப்பு பழக்கம்

கல்வி முக்கிய செய்திகள்

குழந்தைகளின் எதிர்காலத்தில் அக்கறை கொள்ளாத பெற்றோர்களே கிடையாது. குழந்தைகளின் எதிர்காலம் கருதி சேமிக்கும் பழக்கம் பலரிடம் இருந்தாலும், கல்விச் செலவுக்காக சேமிக்கும் பழக்கம் வெகுசில பெற்றோரிடம் மட்டுமே உள்ளது. அதனால்தான் வட்டி, கல்விக்கடன் என வாங்கி சிரமப்படுகிறார்கள். பெற்றோரின் சுமையை குறைக்க மாணவர்களான நீங்களும் சேமிக்கலாம். கல்வி சேமிப்பு எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றிய சிறு கண்ணோட்டம், பெற்றோர், குழந்தைகளின் எதிர்கால கல்விக்கான சேமிப்பை அவர்கள் சிறுவயதாக இருக்கும்போதே தொடங்க வேண்டும். அப்படி விழிப்புணர்வற்ற நிலையில் பெற்றோர் இருந்தால் மாணவர்களான நீங்கள் சாதுர்யமாக செயல்பட்டு சேமிக்கத் தொடங்க வேண்டும். இதற்காக நிதி ஆலோசகரின் உதவியை நாட வேண்டும் என்பதில்லை. உங்கள் அன்றாட செலவுக்கு கொடுக்கும் பணத்தில், அவசியமற்றதை வாங்கி பணத்தை வீணடிக்காமல் சேமித்து வைத்தாலே உங்கள் தேவைகள் பலவற்றை சாதிக்க முடியும். சிறுவயதில் இருந்தே நீங்கள் உண்டியல் பழக்கத்தை கொண்டிருந்தால் உங்கள் பள்ளித் தேவையில் சரிபாதிக்குமேல் உங்கள் சேமிப்பிலேயே ஈடுகட்ட முடியும். மாணவர்களான நீங்கள் உங்கள் பெற்றோரின் சுமையறிந்து சேமிககும் பழக்கத்தை உடனே கடைப்பிடிப்பதை வழக்கமாக்குங்கள், பெற்றோரின் வருவாயில் 3 முதல் 5 சதவீதத்தை எதிர்கால கல்விக்காக சேமிக்க வேண்டும். இரண்டு குழந்தைகள் இருந்தால் 6-7 சதவீதம் வரை சேமிப்பதை வாடிக்கையாக்க வேண்டும் என்கிறார்கள் நிபுணர்கள். அவர்கள் பள்ளி செல்ல தொடங்கிவிட்டால், கல்விக்காக செலவிடும் தொகை உங்கள் வருவாயில் 20 முதல் 25 சதவீதம் வரை எட்டிவிடும். படித்த பெற்றோரே இதை அறிந்திருப்பார்களா? என்பது சந்தேகம்தான். எனவே உங்கள் குடும்பத்தைப் பொறுத்தவரை நீங்கள்தான் முதல் தலைமுறை கல்வியாளர் என்றால், பெற்றோருக்கு சேமிப்பின் அவசியத்தை உணர்த்துங்கள்.