குப்பையில்லா தமிழகம் அமைச்சர் கே.சி.கருப்பணன் துவக்கி வைத்தார்

தமிழக அரசு வெளியிடுள்ள அறிக்கையில், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் அவர்கள் உணவுக் குப்பையை மேலாண்மை செய்வது குறித்து மாணாக்கர் களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பள்ளிகளுக் கிடையேயான “குப்பையில்லா தமிழகம்” என்ற தலைப்பில் போட்டியை இன்று (14.08.2019) தலைமைச் செயலகத்தில் துவக்கி வைத்தார்கள்.

இந்தப் போட்டி, நமது அன்றாட வாழ்வில் தினசரி வீணடிக்கப்படும் உணவுக் குப்பையை மேலாண்மை செய்வது குறித்து மாணவ, மாணவியருக்குக் கற்றுத்தரவும், அவர்களை ஊக்குவிக்கவும் பள்ளிகளுக்கிடையே நடத்தப்படுகின்ற ஒரு போட்டியாகும். இந்தப் போட்டியின் முக்கிய நோக்கம், குறைத்தல், மறுபயன்பாடு, மறுசுழற்சி என்ற செயல்பாடுகளின் மூலம் குப்பையை மேலாண்மை செய்து நம் தேசத்தின் இயற்கை வளங்களை பாதுகாக்கவும், நீர் நிலைகளை ஆக்கிரமிப்பு செய்யும் குப்பையின் அளவை குறைப்பதற்கு வழிவகை செய்வதாகும்.

தமிழ்நாட்டில் பெரும்பாலான பள்ளிகளில், இந்த குப்பை மேலாண்மையை செயல் திட்டமாக்கும் நோக்கத்துடன் பள்ளிக் குழந்தைகளிடமிருந்து ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டு, தமிழகத்தில் உள்ள 50 பள்ளிகளுக்கிடையே நடத்தப்படுகின்றது.

இப்போட்டி நம்ம பூமி அமைப்பும், எர்த் ரீசைக்ளர்ஸ் அமைப்பும் இணைந்து நடத்தும் முயற்சி யாகும். இப்போட்டி 12 வாரங்கள் நடைபெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 12 வார காலத்திற்குள் இந்த உணவுக் குப்பை மேலாண்மை மாணவ, மாணவியரிடையே ஒரு பழக்கமாகவே மாறிவிடும். இது ஒரு சிறிய தொடக்கமேயாயினும், இதன் பயன் காலத்திற்கும் நிலைத்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது