நெடுஞ்சாலைத் துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக புதிய ஜீப்புக்கள் : முதல்வர் வழங்கினார்

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநிலத்தின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் சாலை உள்கட்டமைப்பு வசதிகளின் முக்கியத்துவத்தினை உணர்ந்து, பெருகிவரும் போக்குவரத்து தேவைக்கேற்ப சாலைகளின் கொள்ளளவை அதிகரிக்கவும், பாதுகாப்பான பயணத்தினை உறுதிசெய்யவும், மாநிலம் முழுவதும் புதிய பாலங்களை கட்டுதல், தேவையான பகுதிகளில் தரமான சாலைகள்அமைத்தல், சாலைகள் மற்றும் பாலங்களை பராமரித்தல் போன்ற பணிகளை புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டம், பொருந்தல் கிராமத்தில், பொருந்தலாற்றின் குறுக்கே 5 கோடியே 94 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆற்றுப் பாலத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் இன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்காக
காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்கள். ;

மேலும், திருவண்ணாமலை மாவட்டம், அனக்காவூரில் உள்ள அனக்காவூர் ஏரியில் 3 கோடியே 37 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும்; ஈரோடு மாவட்டம், கொளப்பலூரில் 1 கோடியே 76 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும்; கரூர் மாவட்டம், நந்தனூரில் 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும்; கோயம்புத்தூர் மாவட்டம், அன்னதாசம்பாளையத்தில் ஓடையின் குறுக்கே 1 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும்;

புதுக்கோட்டை மாவட்டம், ஊரணிபுரத்தில் நரியாறு ஆற்றின் குறுக்கே 2 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், ஆவுடையார் கோவில் கண்மாயின் குறுக்கே 1 கோடியே 21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், கமலக்குடியில் கண்மாயின் குறுக்கே 1 கோடியே 21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் மற்றும் பட்டமுடையானில் கல்லணை கால்வாய் பிரிவு வாய்க்கால் குறுக்கே 71 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும்;

மதுரை மாவட்டம், நெடுங்குளத்தில் குண்டாறு ஆற்றின் குறுக்கே 2 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும்; திண்டுக்கல் மாவட்டம், மோர்பட்டியில் வரட்டாறு ஆற்றின் குறுக்கே 1 கோடியே 98 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் மற்றும் வேலாயுதம்பாளையத்தில் காட்டோடையின் குறுக்கே 2 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும்; சிவகங்கை மாவட்டம், உருவாட்டியில் ஓடையின் குறுக்கே 1 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும்;

இராமநாதபுரம் மாவட்டம், ஆனந்துரில் ஓடையின் குறுக்கே 88 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ள 14 ஆற்றுப்பாலங்கள்; 

திருச்சிராப்பள்ளி மாவட்டம் சிறுதையூர் – கொள்ளிடக்கரை சாலையில் இரயில்வே கடவு எண் 228-க்கு மாற்றாக காட்டூர் – லால்குடி இரயில்வே நிலையங்களுக்கு இடையே 26 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இரயில்வே மேம்பாலம்;

இராமநாதபுரம் மாவட்டம், மறவமங்கலம் – இளையாங்குடி – பரமக்குடி – முதுகுளத்தூர் – சாயல்குடி சாலையில், மானாமதுரை மற்றும் பரமக்குடி இரயில்வே நிலையங்களுக்கு இடையில் 2 கோடியே 89 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இரயில்வே கீழ்பாலம்;

என மொத்தம், 56 கோடியே 95 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 14 ஆற்றுப்பாலங்கள், இரயில்வே கடவில் கட்டப்பட்டுள்ள ஒரு சாலை மேம்பாலம் மற்றும் ஒரு சாலை கீழ்பாலத்தினை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் இன்று திறந்து வைத்தார்கள்.

மேலும், தேசிய நெடுஞ்சாலைப் பணிகளை கண்காணித்திடவும், கள ஆய்வுகளை மேற்கொள்ளவும், முதற்கட்டமாக 1 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பில் 20 ஜீப்புகளை நெடுஞ்சாலைத் துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக வழங்கிடும் அடையாளமாக, 5 அலுவலர்களுக்கு அவ்வாகனங்களுக்கான சாவிகளை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் இன்று வழங்கினார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.