ஒரு சொட்டு நீரைக்கூட வீணாக்காமல் நாம் அதை சேமிக்க வேண்டும் : முதல்வர் அறிவுரை

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் தலைமையில் இன்று (8.8.2019) தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஆட்சித் தலைவர்களின் ஆய்வுக் கூட்டத்தில் ஆற்றிய தொடக்க உரையின் போது, தமிழ்நாடு அரசின் முகமாக மாவட்ட நிர்வாகம் விளங்குகின்றது. நீங்கள் மாவட்ட அளவில் அரசின் கண்ணாகவும், கரங்களாகவும் செயல்பட்டால், அரசின் திட்டங்கள் மக்களை உரிய முறையில் சென்றடையும்.

நீங்கள் அரசின் திட்டங்களான குடிமராமத்து, மழைநீர் சேகரிப்பு, பசுமை வீடுகள் கட்டும் திட்டம், பொது விநியோகத் திட்டம், சத்துணவு மற்றும் அங்கன்வாடி குழந்தைகள் திட்டம், தகுதியுடைய நபர்களுக்கு முதியோர் ஓய்வூதியத் திட்டம், கிராமப்புரம் மற்றும் நகர்ப்புரங்களில் குடிநீர் விநியோகம், தெருவிளக்குகள் பராமரித்தல் மற்றும் சுகாதாரத் திட்டங்கள், மக்கள் குறைதீர்க்கும் நாள் மனுக்கள் மற்றும் அதற்கு தீர்வு காணுதல், வீட்டுமனைப் பட்டா இல்லாதவர்களை கணக்கெடுத்து அவர்களுக்கு பட்டா வழங்குதல், அம்மா திட்டம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் குடியிருப்புகளுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்துதல், நெகிழி ஒழிப்பு, அம்மா இருசக்கர வாகனத் திட்டம், பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை, வேளாண் சார்ந்த திட்டங்கள் போன்ற திட்டங்களை ஒவ்வொரு மாதமும் கள ஆய்வு மேற்கொண்டு அந்த விவரங்கள் அடங்கிய ஆய்வறிக்கையை மாதந்தோறும் என்னுடைய அலுவலகத்திற்கு அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களும் அனுப்ப வேண்டும். இந்தக் கூட்டம் நான்கு மாதங்களுக்கு ஒருமுறை எனது தலைமையில் நடக்கும்.

பருவமழை பொய்த்ததன் காரணமாக நமது மாநிலத்தில் பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தான் தமிழ்நாடு நீர்வள ஆதார மற்றும் மேலாண்மை இயக்கத்தை நேற்று நான் துவக்கி வைத்தேன். நமது நீராதாரங்களை பாதுகாக்கவும், அதை பழைய நிலைக்கு மீட்டெடுக்கவும், நீர் நிலைகள் மாசுபடாமல் தடுக்கவும், பயன்படுத்திய நீரை மறுசுழற்சி செய்யவும், ஒரு சொட்டு நீரைக்கூட வீணாக்காமல் நாம் அதை சேமிக்க வேண்டும்.

அம்மாவின் அரசு மக்கள் அரசு என்பதையும், ஏழை எளியோரின் நலன் காக்கும் அரசு என்பதையும், அவர்களுக்கு செயலாற்றும் அரசு என்பதையும் மக்கள் உணரும்படி மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாவட்டங்களில் சுறுசுறுப்பாக களத்தில் இறங்கி அரும்பணியாற்ற வேண்டும் என்பதை நான் இத்தருணத்தில் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறினார்.