தேசிய கைத்தறி தினத்தையொட்டி முதல்வர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி

தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிடுள்ள அறிக்கையில், இந்திய வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த சுதேசி இயக்கம் 1905-ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 7-ஆம் நாள் தொடங்கப்பட்டது. உள்நாட்டுப் பொருட்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் தொடங்கப்பட்ட சுதேசி இயக்கத்தை நினைவுகூரும் வகையிலும், கைத்தறி நெசவாளர்களை சிறப்பிக்கும் வகையிலும், 2015-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் திங்கள் 7-ஆம் நாள் தேசிய கைத்தறி தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

கைத்தறி தொழில், நாட்டின் பொருளாதார செயல்பாட்டில் விவசாயத்திற்கு அடுத்து மிகப் பெரிய அளவில் வேலைவாய்ப்பினை வழங்கும் தொழிலாக விளங்கி வருகிறது. தமிழ்நாட்டின் கைத்தறி பிரிவானது, ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்று சிறப்பு மிக்கதும், நெசவாளர்களின் மிகச் சிறந்த கைத்திறனுக்கான பாரம்பரியத்தையும் கொண்டது. தமிழ்நாட்டில் தற்போது 1,137 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் கீழ் 2.51 லட்சம் கைத்தறிகள் இயங்கி வருகின்றன.

கைத்தறித் துறையை மேம்படுத்தவும், நெசவாளர்கள் வாழ்வு வளம் பெறவும் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்பு வழங்கிடும் நோக்கில் விலையில்லா வேட்டி சேலை வழங்கும் திட்டம், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியருக்கு ஆண்டுதோறும் 4 இணை விலையில்லா சீருடைகள் வழங்கும் திட்டம், பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு செப்டம்பர் 15 முதல் ஜனவரி 31 வரை கைத்தறித் துணிகள் விற்பனைக்கு 30 விழுக்காடு தள்ளுபடி மானியம் வழங்கும் திட்டம், தமிழ்நாடு கூட்டுறவு கைத்தறி நெசவாளர் முதியோர் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியத் திட்டம், நெசவாளர்களுக்கு முதலமைச்சரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் வழங்கும் திட்டம், கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களுக்கு விலையில்லா மின்சாரம் வழங்கும் திட்டம், நெசவாளர் நல்வாழ்வு காப்பீடு திட்டம், தமிழ்நாடு கூட்டுறவு கைத்தறி நெசவாளர் சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்டம், டாக்டர் எம்.ஜி.ஆர். கைத்தறி நெசவாளர் நல்வாழ்வு அறக்கட்டளையின் கீழ்நெசவாளர்களின் வாரிசுகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டம், கைத்தறி நெசவாளர்களுக்கான வட்டி மானியத் திட்டம், மாநில அளவில் சிறந்த நெசவாளர் விருது வழங்கும் திட்டம், திறன்மிகு கைத்தறி நெசவாளர்களுக்கு பரிசுகள் வழங்கும் திட்டம்,
கைத்தறி நெசவினை இலாபகரமான தொழிலாக்குதல், புதிய தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி உற்பத்தியை அதிகப்படுத்துதல், புதிய வடிவமைப்பு திறன்களை மேம்படுத்துதல், கைத்தறி துணிகளை சந்தைப்படுத்துதல், கைத்தறி துணிகளை பிரபலப்படுத்துதல், பாரம்பரியம்மிக்க கைத்தறி நெசவினை பாதுகாத்தல் ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில் நிதியுதவி அளிக்க “”கைத்தறி ஆதரவுத் திட்டம்”” போன்ற பல்வேறு திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.

கைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்திடும் வகையில், தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் கைத்தறி நெசவாளர்களின் புதிய தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்ட பட்டு மற்றும் பருத்தி கைத்தறி ரகங்களை அதிகளவில் வாங்கி பயன்படுத்திட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள கைத்தறி நெசவாளர்கள் மற்றும் இத்தொழில் சார்ந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதோடு, புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, கைத்தறி நெசவாளர்களுக்கென செயல்படுத்தி வரும் திட்டங்களை நல்ல முறையில் பயன்படுத்தி தங்களது வாழ்வில் வளம்பெற வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.