உறுப்பினரை மிரட்டும் வகையில் பேச வேண்டாம் : டி.ஆர்.பாலுவிற்கு சபாநாயகர் அறிவுரை

காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவை மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தாக்கல் செய்தார். இது தொடர்பான விவாதம் நடைபெற்றது. அப்போது திமுக எம்.பி. டி.ஆர்.பாலு பேசிக்கொண்டிருந்த போது அதிமுக எம்.பி.ரவீந்திரநாத் குறுக்கிட முயற்சி செய்தார்.

அப்போது டி.ஆர்.பாலு சற்று ஆவேசமாக கையை நீட்டி ரவீந்திரநாத்தை அமரும்படி சமிக்ஞை காட்டியதோடு உங்களுக்கு முதுகெலும்பு இல்லை; அமருங்கள். இங்கே முதுகெலும்பு உள்ள நபர்களைத்தான் சபாநாயகர் பேச அனுமதித்தார் என்று கூறினார்.

கனிமொழி எம்.பி.யும் எழுந்து ரவீந்திரன் ஏன் குறுக்கிடுகிறார்? என்று கேள்வி எழுப்பினார். அப்போது சபாநாயகர், உறுப்பினரை மிரட்டும் வகையில் பேச வேண்டாம் என்று அறிவுறுத்தினார். அதிமுக எம்.பி. ரவீந்திரநாத்தை முதுகெலும்பில்லாதவர் என பாலு விமர்சித்தபோது திமுக எம்.பி.க்கள் மேஜையைத் தட்டி ஆராவாரம் செய்தனர்.