அம்மனுக்குப் படைத்து நோயாளிகளுக்குத் தரப்படும் மருந்து பிரசாதம்

உடல் நலத்திற்கான மருந்தைத் தயாரித்து, அதை அம்மனுக்குப் படைத்து வழிபடுவதுடன், அந்த மருந்தையேப் பிரசாதமாகத் தரும் சிறப்புமிக்கக் கோவிலாகக் கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம், கூத்தாட்டுக்குளம் அருகிலுள்ள நெல்லியக்காட்டு மனா என்னும் இடத்தில் அமைந்திருக்கும் பத்ரகாளி கோவில் இருக்கிறது, தல வரலாறு, கேரளாவில் திருமந்தாம்குந்து என்ற இடத்தில் நெல்லியக்காட்டு இல்ல மரபு வழியைச் சேர்ந்த பெரியவர் ஒருவர் வைத்தியத் தொழில் செய்து வந்தார். அவரது கனவில் தோன்றிய தன்வந்திரி பகவான், ‘தளிக்குன்னு’ என்ற இடத்தில் வைத்தியர் எவரும் இல்லாததால், அங்கிருப்பவர்கள் பலவிதமான நோய்களால் துன்பமடைந்து கொண்டிருப்பதாகவும், அந்த ஊருக்குச் சென்று தங்கி, அங்கிருப்பவர்களுக்கு வைத்தியம் செய்ய வேண்டுமென்றும் கூறியிருக்கிறார், மறுநாள் காலையில், அந்தப் பெரியவர் தான் கண்ட கனவைத் தன் குடும்பத்தினரிடம் சொல்ல, அவர்களும் அதை ஏற்றுத் தன்வந்திரி பகவான் சொன்ன இடத்திற்குச் செல்ல முடிவு செய்தனர். அங்கிருந்து கிளம்பியவர்கள், தங்களின் குடும்பத் தெய்வமாக வழிபட்டு வந்த பத்ரகாளியம்மன் சிலையையும் எடுத்துச் சென்றனர், தளிக்குன்னு அருகில் கூத்தாட்டுக்குளம் என்ற இடத்தில் சென்று தங்கிய அவர்கள், அங்கு பத்ரகாளியம்மன் சிலையை நிறுவி வழிபட்டு, அந்தப்பகுதி மக்களுக்குச் சிகிச்சை அளிக்கத் தொடங்கினர். நாளடைவில், அந்தக் குடும்பத்தினர் விஷக்கடிக்குச் சிகிச்சை அளிப்பதில் சிறப்பு பெற்றனர், இந்நிலையில் ஒரு நாள், பாம்பு கடித்து உயிருக்குப் போராடிய நிலையில் கொண்டு வரப்பட்ட ஒருவருக்குச் சிகிச்சையளித்து அவரைக் காப்பாற்றினர் ஆனால், சிறிது நேரத்தில் அங்கிருந்த கால்நடைகள் அனைத்தும் இறந்து போயின. அதனால் கவலையடைந்த அந்தக் குடும்பத்தின் பெரியவர், தங்களது குடும்பத் தெய்வமான பத்ரகாளியம்மன் சிலையின் முன்னால் அமர்ந்து வழிபட்டார், அப்போது அங்கு வந்த ஒருவர், சில ஓலைச்சுவடிகளை அவரிடம் கொடுத்து, ‘விஷக்கடிக்குச் சிகிச்சை செய்வதை விட்டுவிட்டு, பொதுவான சிகிச்சைகளுடன், இந்த ஓலைச்சுவடியில் சொல்லப்பட்டிருப்பதை போல், கண் சிகிச்சைக்கான மருந்துகளைத் தயாரித்து, அதை அம்மனுக்குப் படைத்து நோயாளிகளுக்குத் தாருங்கள்’ என்று சொல்லிச் சென்றார், 

அதனை ஏற்றுக் கொண்ட பெரியவருக்கு, தன்னிடம் ஓலைச்சுவடியைக் கொண்டு வந்து கொடுத்தவர் தன்வந்திரி பகவான் என்பது பின்னரே தெரிந்தது. அதனைத் தொடர்ந்து, அங்கு தன்வந்திரி பகவானுக்கும் தனியாகச் சிலை செய்து நிறுவப்பட்டது என்று இக்கோவிலின் தல வரலாறு கூறுகிறது, தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது ஆலகால விஷம் எங்கும் பரவியது. விஷத் தாக்கத்தால் எங்கும் கொடிய நோய்கள் பரவத் தொடங்கியது. அதிலிருந்து, தங்களைக் காப்பாற்றும்படி தேவர்கள் அனைவரும் தேவ மருத்துவர்களான அஸ்வினி குமாரர்களின் உதவியை நாடினர். தேவர்கள் செய்த தீவினையின் காரணமாகவே அப்படியொரு நோய் ஏற்பட்டிருப்பதாகவும், அதிலிருந்து தேவர்களைக் காக்கப் பார்வதி தேவியின் உதவியைப் பெற வேண்டும் என்றும் அவர்கள் கூறினர், அதனைத் தொடர்ந்து, தேவர்கள், அசுரர்கள் மற்றும் அஸ்வினி குமாரர்கள் ஆகியோர் அம்மனிடம் சென்று, தங்களை அந்தக் கொடிய நோயிலிருந்து காப்பாற்றியருளும்படி வேண்டினர். அவர்களது வேண்டுதலில் மனமிரங்கிய அம்மன், தன் முன்னிலையில் தேவமருத்துவர்களான அஸ்வினி குமாரர்களை மருந்து தயாரிக்கச் சொன்னார், அவர்களும் அம்மனின் முன்பாக, ஒரு இடத்தில் அதற்கான மருந்தினைத் தயாரித்தனர். அதன் பிறகு, அந்த மருந்தைச் சாப்பிட்ட தேவர்கள் மற்றும் அசுரர்கள் அனைவரும் தங்களுக்கு ஏற்பட்ட நோயில் இருந்து மீண்டு நலம் பெற்றனர் அஸ்வினி குமாரர்கள் மருந்து தயாரித்த அந்த இடத்தில்தான் தற்போதைய பத்ரகாளியம்மன் கோவில் அமைந்திருக்கிறது என்று ஒரு கூடுதல் தகவலும் சொல்லப்படுகிறது.